Published on 23/07/2019 | Edited on 23/07/2019
தமிழகத்தில் பணப்பட்டுவாடா பிரச்சனை காரணமாக வேலூர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அதிமுக ,திமுக இரண்டு கட்சிகளும் வேலூர் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் இரண்டு கட்சி தேர்தல் பொறுப்பாளர்களும் களப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டில் அரசியல் உள்நோக்கம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். டெல்லி சென்ற ஓபிஎஸ் முதலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவரோட நடைபெற்ற சந்திப்பில் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கும் இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு வேண்டிய நிதி குறித்து மனு கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். அதோடு பாஜகவின் மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான சில கோரிக்கைகளை வைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டால் எடப்பாடி தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.