Published on 27/09/2019 | Edited on 27/09/2019
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள காலியாக உள்ள சட்ட மன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக தலைமை கழகம். அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம். முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவார் எனவும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது பற்றி விசாரித்த போது, இடைத்தேர்தல் அறிவித்த உடன் அதிமுக சார்பாக நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் 90 பேர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ததாக சொல்லப்பட்டது. அதில், ஒரு குறிப்பிட்ட 12 பேரிடம் மட்டுமே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி நேர்காணலை நடத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களை தனியாக அமர வைத்துள்ளனர். நேர்காணல் நடத்திய பிறகு மீதமுள்ளவர்களிடம் இடைத்தேர்தலில் நாம் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்சிக்காக உழைக்க வேண்டும். சீட் கொடுக்கவில்லை என்று கவலை பட வேண்டாம். உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எடப்பாடியும், பன்னீர்செல்வமும் கூறியதாக சொல்லப்படுகிறது. அதோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் மக்களை நாம் தைரியமாக சந்திக்க முடியும். ஒரு வேளை தோல்வி வந்தால் மக்கள் நம் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது உண்மை ஆகிவிடும். அதனால் சீட் கொடுக்கவில்லை என்று தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிவிக்கின்றனர்.