2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமலே சிறிது நேரத்திலேயே வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடனே தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர் வெளியேறிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
அதனை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் 2வது நாள் அலுவல் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாள் அலுவல் இன்று (08-01-25) தொடங்கியது. அப்போது, ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “புதிதாக விண்ணப்பித்துள்ளோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமைத் தொகை வழங்கக் கோரி வந்த விண்ணப்பங்கள் தொடர்பாக முதல்வரிடம் பேசியுள்ளோம். புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு முதல்வரின் அறிவுரைப்படி உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவத்தை குறிக்கும் விதமாக தொடர்ந்து இரண்டு நாட்களாக ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து சட்டப்பேரவைக்கு வரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர். கருப்பு உடை மற்றும் டங்ஸ்டன் கணிம சுரங்க திட்டத்திற்கு எதிராக, ‘டங்ஸ்டன் தடுப்போம் - மேலூர் காப்போம்’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட முகக் கவசத்தை அணிந்து அதிமுகவினர் வந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம், டங்ஸ்டன் எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை அதிமுகவினர் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காய்ச்சல் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக அவைக்கு வரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.