புதுக்கோட்டை முன்னால் நகர்மன்றத் தலைவர் ராஜசேகர். அமைச்சர் விஜயபாஸ்கருடன் கூடிய நட்பால் 2012 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நடந்த நகர்மன்ற இடைத்தேர்தலில் ராஜசேகரை வேட்பாளராக்கினார். வேட்பாளராக்கப்பட்ட ராஜசேகர் தனித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காக புதிய பார்முலாவை கையாண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர். ராஜசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். வேறு எந்த கட்சி வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்வதை தடுக்க அ.தி.மு.க அடிபொடிகளை வேட்பு மனுவோடு காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையாக காத்திருக்க வைத்து வேறு யாரையும் வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் ராஜசேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அந்த அளவுக்கு நெருக்கம் காட்டிய அமைச்சரும் – ராஜசேகரும் ஏனோ கடந்த சில ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர்.
அதன் விளைவு ஒ.பி.எஸ். – ஈ.பி.எஸ் அணிகள் பிரிந்த போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமானுடன் ராஜசேகர் ஒ.பி.எஸ். அணிக்கு சென்றார். அதன் பிறகு தலைமைகள் ஒன்று சேர்ந்தாலும் புதுக்கோட்டையில் ஒ.பி.எஸ். அணி ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தது. அதனால் அடிக்கடி மௌன மோதல்கள் நடந்து வந்தது. ஒ.பி.எஸ். அணியில் இருந்தவர்களுக்கு கட்சி பதவி இல்லை.
இந்த நிலையில அமைச்சர் கலந்து கொள்ளும் விழாக்களை மாஜிக்கள் கார்த்திக் தொண்டைமானும், ராஜசேகரும் அவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர். கடந்த வாரம் அறந்தாங்கி ஒன்றியத்தில் ஒரு பள்ளி தாளாளர் திருமண விழாவிற்கு வைகை செல்வனை அழைத்து வந்தனர் ஒ.பி.எஸ். அணியை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் தான் 5 ந் தேதி ராஜசேகருக்கு எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பதவியும், கார்த்திக் தொண்டைமானுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவியையும் அறிவித்தார்கள். அதற்காக ஒ.பி.எஸ். – ஈ.பி.எஸ்.க்கு நன்றி தெரிவித்து பதாகை கூட வைத்தார்கள்.
ஆனால் 6 ந் தேதி ராஜசேகர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஒ.பி.எஸ் – ஈ.பி.எஸ். இணைந்து வெளியிட்ட அறிக்கையால் புதுக்கோட்டை கலகலத்து கிடக்கிறது.
ஏன் இப்படி கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்ற பாடல் வரிகள் போல ஒரே நாளில் பதவி – அடுத்த நாளே பறிப்பு என்றோம்...
ராஜசேகர், கார்த்திக் தொண்டைமானுக்கு கட்சி பதவி கொடுத்திருப்பதை அமைச்சர் தரப்பால் எற்க முடியவில்லை. அதனால் மாவட்ட அளவில் பொருப்பில் உள்ள சிலரை பொருப்புகளை பறிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என்று கட்சி தலைமை வரை அவசர ஓலை அனுப்ப வைத்துவிட்டாராம் அமைச்சர். அதன் விளைவு தான் ஒரே நாளில் பதவி பறிப்புக்கு காரணம்.
ஆனால் ஒ.பி.எஸ். அணிக்கு பதவி கொடுப்பது பொல கொடுத்து பறித்துக் கொண்டதால் அவர்களின் ஆதரவாளர்கள் கொஞ்சம் டென்சனாகவே உள்ளதால் விரைவில் பதவி பறிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் பற்றி சுவரொட்டிகள் கூட வெளியாகலாம் என்று ர.ர.க்களே பேசிக் கொள்கிறார்கள்.