Skip to main content

சரணடைந்த சில நிமிடங்களிலேயே ஜாமீன் பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா 

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

AIADMK ex-minister Saroja released on bail within minutes of surrender

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜா. முந்தைய அதிமுக ஆட்சியின்போது சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்தார். இவர், தனது துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 15 பேரிடமிருந்து 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, மோசடி செய்துவிட்டதாக அவருடைய முன்னாள் உதவியாளரும், உறவினருமான குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

 

அதன்பேரில் சரோஜா, அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, சரோஜாவும் அவருடைய கணவரும் தலைமறைவாகினர். 

 

முதலில் முன்ஜாமீன் கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகிய சரோஜா, பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிணைத் தொகை ரூ.25 லட்சத்துடன் இன்று சரணடைந்தார். சரணடைந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடி புகார் அளித்த குணசீலன் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்