Skip to main content

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலி..! -ராமதாஸ் கண்டனம்!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
rr

 

ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசங்கள் இந்திய தகவல்தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஆகும். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அந்த நிறுவனங்களால் அவமானப் படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டதன் மூலம் இளைஞர்களின் தற்கொலை  தடுக்கப்பட்டுள்ள நிலையில், கந்துவட்டி செயலி கடன் நிறுவனங்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காத ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.

 

தகவல்தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதர்களின் பேராசை ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவது தான் ஆன்லைன் சூதாட்டங்களின் அடிப்படை ஆகும். ஆன்லைன் சூதாட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியையும்,  மனிதர்களின் பணத்தேவையையும் பயன்படுத்தி மக்களைச் சுரண்டும் செல்பேசி செயலி வழி ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்கள், தங்களிடம் கடன் வாங்கி குறித்த காலத்தில் செலுத்தத் தவறியவர்களை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுகின்றன.

 

இந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்கள்,  தொலைபேசி மூலம் இளைஞர்களை தொடர்பு கொண்டு எந்த ஆவணமும் இல்லாமல் எளிய முறையில் கடன் வழங்குவதாக ஆசை காட்டுகின்றன. பணம் தேவைப்படுவோரை தங்கள் நிறுவனத்தின் செல்பேசி செயலியில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு பதிவு செய்யும் போது கடன்தாரரின் அனைத்து விவரங்களும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாற்றும் நிறுவனம் ஆகியவற்றின் அனைத்து தரப்பினரின் செல்பேசி எண்களும் ஆன்லைன் கந்துவட்டி நிறுவனத்திற்கு செல்கின்றன.

 

ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் செல்பேசி செயலியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை எந்த ஆவணமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு வட்டி மற்றும்  பிற செலவுகளுக்காக 30% வசூலிக்கப்படுகிறது. ஒருவர் ரூ.5,000 கடன் வாங்கினால் அதில் வட்டியாக ரூ.1500 பிடித்துக் கொண்டு, மீதமுள்ள தொகை ரூ.3,500 மட்டுமே கடன்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தக் கடனை திருப்பிச் செலுத்த ஒரு மாதத்திற்கும் குறைவாகவே அவகாசம் வழங்கப் படுகிறது. அதற்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அவர்களின் செல்பேசி வழியாக தகாத வார்த்தைகளில் திட்டுதல், கடன் பெற்றவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைத்து வாட்ஸ்-ஆப் குழுக்களை உருவாக்கி அதில் கடன் பெற்றவர் குறித்து அவதூறு செய்திகளை பரப்புதல் உள்ளிட்ட ஆன்லைன் அட்டகாசங்கள் அனைத்தையும் கந்து வட்டி நிறுவனங்கள் அரங்கேற்றுகின்றன. அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

 

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற தகவல்தொழில்நுட்ப பணியாளர் ஆன்லைன் கந்து வட்டி நிறுவனம் ஒன்றிடம் கடன் பெற்று அதை செலுத்த முடியாததால் கடுமையான தொல்லை மற்றும் அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மன உளைச்சலை தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இன்னொருவர் ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கிய கடனை அடைக்க இன்னொரு நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார். இவ்வாறாக பெறப்பட்ட கடன் மற்றும் வட்டித் தொகை லட்சக்கணக்கில் அதிகரித்து விட்ட நிலையில், ஆன்லைன் கந்து வட்டி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர் பணியாற்றும் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். அதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த பணியாளர், கடனையும் அடைக்க முடியாமல், வாழவும் வழியில்லாமல் வாடிக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்டவர்கள், வேலை இழந்தவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

 

இந்தியாவில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது; கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களின்  புகைப்படங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்நிறுவனங்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் 30% வரை வட்டி வசூலிக்கின்றன; கடன் பெற்றவர்கள் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவதூறு பரப்புகின்றன என்பது தெரியவில்லை. இதை மத்திய, மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் எவ்வாறு அனுமதிக்கின்றன என்பதும் புரியவில்லை. ஆன்லைன் கந்துவட்டி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அரவிந்த் அதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

 

ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசங்கள் இந்திய தகவல்தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஆகும். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அந்த நிறுவனங்களால் அவமானப் படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும். எனவே, இத்தகைய ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் மற்றும் வணிகம் செய்வோர், மாத ஊதியதாரர்கள் எளிதாக கடன் பெற வகை செய்யப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ஆன்லைன் நிறுவனங்கள் எளிதாக கடன் தருவதாக ஆசை காட்டினால் அதை நம்பி, விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்து மடிவதைப் போல, இளைஞர்கள் கடன் பெற்று தங்கள் வாழ்க்கையை இழந்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.