கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6 நபர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலாளர், டிஜிபி போன்ற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் பல அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் சொல்லுகின்ற செய்திகளை பெரிதாக்க வேண்டாம். மதுரையில் ராணுவ வீரரின் உயிரிழப்பு சம்பந்தமாக ஒரு செய்தி பரவியது. ராணுவ வீரரின் உயிரிழப்பை அரசியல் ஆக்கியவர்கள் கோவையிலும் அரசியல் ஆக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
விசாரணை நடந்து முடிந்து யார் குற்றவாளி என அடையாளம் கண்ட பிறகு தான் காவல்துறை அதை வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சூழலில் வெளியிடுவதற்கு முன்பே ஒரு கட்சியை சார்ந்த தலைவருக்கு தெரிகிறது எனச் சொன்னால் தேசியப் புலனாய்வு அமைப்பு முதலில் விசாரிக்கப்பட வேண்டிய நபர் பாஜகவின் தலைவர் தான். குறிப்பிட்ட அதிகாரிகள் விசாரிக்கும் விசாரணை மற்றும் அவர்கள் அளிக்கும் அறிக்கைக்கு முன்பாகவே ஏன் ஒரு கட்சியை சார்ந்தவர் இதை எல்லாம் சொல்லுகிறார் எனும்போது தேசியப் புலனாய்வு அமைப்பு முதலில் அவரைத் தான் விசாரிக்க வேண்டும்.
சம்பவம் நடந்த பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் கூட குற்றவாளிகளின் பெயர்களை காவல்துறை வெளியிடவில்லை. பந்த் செய்யும் அளவிற்கு என்ன இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் எத்தனையோ பேர் தீவிரவாத தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு எல்லாம் எத்தனை மத்திய அமைச்சர்கள் அதற்கு பதில் சொன்னார்கள்.
குற்றவாளிகள் யார்? என்ன? என்று தீர்மானிக்கப்பட்டு குற்றச் சம்பவம் என்பது மாநிலத்திற்குள் முடியாமல் மாநிலம் கடந்தும் இதன் விசாரணை தேவை என்பதால் முதல்வர் முடிவெடுத்து இதை மாற்றியுள்ளார். இதை ஏதோ தான் சொல்லித் தான் மாற்றுகிறார்கள் என்று தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்” எனக் கூறினார்.