Skip to main content
Breaking News
Breaking

மோடி பொதுக்கூட்டத்தில் பாமகவினர் திரளாக பங்கேற்குமாறு கட்சி தலைமை உத்தரவு

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாமகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் கட்சியினருக்கு விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும்  வெற்றிக் கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, கூட்டணியில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் சென்னை அருகே நாளை நடைபெறவிருக்கிறது.
 

சென்னையை அடுத்த வண்டலூரில் நாளை பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் நடைபெறவிருக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமரும், தேசிய அளவிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும் இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
 

modi


 

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக - பா.ம.க - பாஜக கூட்டணிக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை நிரூபிக்கும் வகையிலும், மக்களவைத் தேர்தலுக்கான பயணத்தின் நல்ல தொடக்கமாகவும் இந்தப் பொதுக்கூட்டம் அமைய வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் விரும்புகிறார்.
 

கூட்டணியின் வலிமையையும், பாட்டாளி மக்கள் கட்சியின் வலிமையையும் பறைசாற்றும் வகையில் இந்தப் பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு, பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பா.ம.க.வினர் வந்து சேர வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்