நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கினாலும். ஒபிஎஸ் உள்ளிட்ட சிலர் தங்களது பலம் என்னவென்பதை நிரூபிப்பதற்காகப் போட்டியிடுகின்றனர். முன்பு பிரபலமாக இருந்த சிலர், இப்போது சத்தமே இல்லாமல், கவனத்தை ஈர்க்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்தகையவர்களில் மூவரைப் பார்ப்போம்.
சி.எஸ்.கர்ணன்
முன்னாள் நீதிபதி இவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர், தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள், தாம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னைத் துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்தார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், கர்ணனை சென்னையில் இருந்து கொல்கத்தா நீதிமன்றத்திற்கு மாற்றி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை ஏற்க மறுத்த கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு, அவரே தடை விதித்தார். இது பெரிய பிரச்சனையாக மாறியது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக, அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பி வைத்தார்.
உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிபதிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த கர்ணனுக்கு, பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. எனினும் அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவும் இல்லை; விளக்கம் அளிக்கவும் இல்லை. அடுத்து கர்ணன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தது உச்சநீதிமன்றம். இவ்வழக்கு பதிவானதும் கர்ணன் தலைமறைவானார். நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றார். இந்த வழக்கில் இவருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை அருகே பதுங்கியிருந்த சி.எஸ்.கர்ணனை காவல்துறையினர் கண்டுபிடித்து, 2017 ஜூன் 20ஆம் தேதி கைது செய்து, கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைத்தனர். இடையில் இவர் பலமுறை பிணை கேட்டும் நீதிமன்றம், கர்ணனுக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதனால், 6 மாதம் சிறைவாசம் முடிந்த பிறகே, கர்ணன் சிறையிலிருந்து வெளியே வந்தார். நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியின் சார்பில், மத்திய சென்னையில் போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ணனின் இயற்பெயர் கருணாநிதி. ஆனால், 1991இல் தனது பெயரைக் கர்ணன் என மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ச.பிரேமா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திடீரென ஒருநாள் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்த பெண்மணி, நான் ஜெயலலிதாவின் மகள் என்று மீடியாக்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தனது பூர்வீகம் மைசூரு என்றும், தற்போது பல்லாவரத்தில் தங்கியிருப்பதாகவும் கூறிய அவர், ஜெயலலிதாதான் தனது தாயார் என்று சத்தியம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க பிரேமா என்ற ஜெயலட்சுமி மறுத்துவிட்டார். இந்த பிரேமா, தற்போது தேனி தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கிறார்.
நடிகர் மன்சூர் அலிகான்
பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், இந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் பாமக ஆதரவாளராக இருந்த மன்சூர் அலிகான், பின்னர் புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்தார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான், மாட்டுவண்டியில் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். அந்தத் தேர்தலில் 87,429 (13.28%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தினார்.
அதன்பிறகு, நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த மன்சூர் அலிகான், 2019 திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு 54957 (4.73 %)வாக்குகளைப் பெற்றார். அண்மையில் இந்திய ஜனநாயகப் புலிகள் எனும் பெயரிலான கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் மன்சூர் அலிகான், இந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பலாப்பழம். பெரிதினும் பெரிது கேள் என்ற உத்வேக வார்த்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தேர்தல் களத்தில் டஃப் கொடுக்கிறார்கள் இவர்கள்!