நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல்தான் தான் கலந்துகொள்ளும் கடைசி தேர்தல் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் நேற்று அம்மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளில் நடைபெற்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் மாறுபட்ட முடிவுகள் வெளியாகின. தென்மாநிலமான கர்நாடகாவில் காலூன்ற பா.ஜ.க. மற்றும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் சித்தாரமையா சாமுண்டீஸ்வரி மற்றும் படானி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஒன்றான சாமுண்டீஸ்வரி தொகுதியில் இன்று பேசிய சித்தராமையா, காங்கிரஸ் நிச்சயமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவே எனக்குக் கடைசி தேர்தல் என தெரிவித்தார்.
தலித் ஒருவரை முதல்வராக்குவது குறித்து செய்தியாளர் கேள்வியெழுப்பிய போது, ‘கட்சி அப்படியொரு முடிவை எடுத்தால் நிச்சயமாக அதை வரவேற்பேன்’ என உடனடியாக பதிலளித்தார்.
முன்னதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு குறித்து பேசிய அவர், ‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் இரண்டு நாள் பொழுதுபோக்குதான். இதையெல்லாம் நம்புவது நீந்தத் தெரியாதவனிடம் ஆற்றின் சராசரி ஆழம் 4 அடி என யாரோ கூறிதை நம்பிவிட்டு அவன் நீந்துவதற்குச் சமமானது. 6 + 4 + 2 ஆகியவற்றின் சராசரி 4. ஆறு அடி ஆழத்தில் அவன் மூழ்கிப்போவான். அதனால், கட்சி ஊழியர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நம்பாமல், வாரயிறுதியைக் கொண்டாடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.