புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (22/02/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது. கிரண்பேடியைக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறித்தது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் குதிரை பேரம் நடத்தினார்கள். தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை துணைநிலை ஆளுநராக நியமித்தபோதே உள்நோக்கத்தைக் கண்டிக்கிறேன்.
பா.ஜ.க.வின் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலை வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் அடிமை அ.தி.மு.க.வை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவது போல, புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட முயற்சித்தால், நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தி.மு.க. துணை நிற்கும். ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.