இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். இக்கருத்துகள் அரசியல் கட்சித் தலைவர்களிடையே பலத்த கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. திருச்சி சிவா, “சட்டமசோதாவை அவர்களால் வைத்துக்கொள்ள முடியாது. அப்படியென்றால் அதை அவர்கள் நிராகரிக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை தான் ஆளுநர் எந்த மசோதாவையும் கையெழுத்திடாமல் வைத்துக்கொள்ளலாம். பின்னர் மறுக்கிறேன் எனச் சொல்ல வேண்டும். அப்படி சொல்வதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.
அப்படி எப்போதோ நடந்திருக்கலாமே தவிர அதற்கு எந்த வகையான உதாரணங்களும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றாது. அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற சட்டங்களை அவர்கள் இயற்றுகின்ற போது அங்கு ஆளுநராக பொறுப்பில் இருப்பவர் அதற்கு இசைவு தரவேண்டியது அவர்களது கடமை. மாறாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டமன்றத்தின் மாண்புகளை மீறும் வகையில் செயல்படுவது எல்லாம் அவரது வரம்புகளுக்கு மீறியதாகத்தான் எல்லோரும் கருத முடியும்” எனக் கூறினார்.