தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தனக்கு சீட் வழங்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் என்பவரை அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், தனக்கு சீட் வழங்காததால் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் முடிவு செய்திருக்கிறார். இன்று (18.03.2021) அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011, 2016 ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோப்பு வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது. 'நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்' என தற்போதைய அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் மீது தோப்பு வெங்கடாசலம் குற்றசாட்டும் கூறியுள்ளார்.