திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர்மன்றத்தில் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 15 இடங்கள், திமுக 12 இடங்கள், மதிமுக, காங்கிரஸ் தலா 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுயேட்சை ஆகியவை தலா ஒன்று என வெற்றி பெற்றுள்ளன. வெற்றி பெற்ற நகர் மன்ற உறுப்பினர்களான கவுன்சிலர்கள், இன்று (2ஆம் தேதி) பதவியேற்க உள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார். அதன்மூலம் திமுக தரப்பின் பலம் 18 ஆக இருப்பதால், நகர் மன்றத் தலைவர் பதவி திமுகவின் ஆரணி நகரச் செயலாளர் ஏ.சி.மணிக்கும், நகர் மன்றத் துணைத் தலைவர் பதவி சி.பாபுவுக்கும் என முடிவு செய்யப்பட்டது.
எங்கள் ஆதரவில்தானே சேர்மன் பதவியை பிடிக்கிறீர்கள். அதனால் நகர மன்றத் துணைத்தலைவர் பதவி எங்களுக்கு தாங்கள் என காங்கிரஸ், மதிமுக இரண்டும் திமுக நிர்வாகிகளிடம் முட்டி மோதுகின்றன. திமுக மாவட்டத் தலைமை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மதிமுக, காங்கிரஸ் இரண்டு கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் வருத்தத்தில் உள்ளனர். திமுக தலைமையிடம் வலியுறுத்தி துணைத்தலைவர் பதவியை நாம் பெறவேண்டும் என தங்கள் தலைமையை வலியுறுத்தத் துவங்கியுள்ளனர்.
புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகத்தின் சொந்தவூர் ஆரணி நகரம். ஏ.சி.எஸ்-சின் உடன்பிறந்த தம்பி பாபு, வார்டு கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை அறையிலேயே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர். அதிகாரிகளிடமிருந்து வெற்றி சான்றிதழ் பெறுவதற்காக திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் தரணிவேந்தன், நகரச் செயலாளர் ஏ.சி.மணி போன்ற திமுக நிர்வாகிகளுடன் சென்று பெற்றார். திமுக நிர்வாகிகளிடம் தன்னை வைஸ் சேர்மனாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஆரணி நகர திமுக நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். இதனால் மீண்டும் திமுக டூ அதிமுக என பயணமாகிவிட்டார்.
இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்களை வளைப்பது என அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்பை முன்னாள் அமைச்சரான சேவூர்.ராமச்சந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கான செலவுகளை நகர் மன்றத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பாரி.பாபு, ஏ.சி.எஸ் தம்பி பாபு இருவரும் கூட்டாக செய்வது என முடிவாகியுள்ளது.
களத்தில் இறங்கிய ஏ.சி.பாபு, மதிமுக மாவட்டச் செயலாளர் டி.ராஜாவிடம் பேசியுள்ளார். மதிமுகவின் இரண்டு கவுன்சிலர்களுக்கு தலா 25 லட்சம் தருகிறோம், மறைமுக தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டுள்ளார். கூட்டணி தர்மம், கட்சி தலைமை முடிவை மீறமுடியாது என அவர் சொன்னாராம். நீங்க அதிமுகவுக்கு வந்துடுங்க, நகர செயலாளர் பதவி தருவது எங்கள் பொறுப்பு, உங்க செலவுக்கு 1 கோடி ரூபாய் நிதி தர்றோம் என பேசியுள்ளார்கள். அதனை அவர் மறுத்துவிட்டார் என்கிறார்கள் மதிமுகவினர். இதேபோல் காங்கிரஸ் கவுன்சிலர்களிடமும் பேசியுள்ளார்கள். இதுகுறித்து ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் வரை பேசியுள்ளனர்.
இதனையெல்லாம் உன்னிப்பாக கவனித்துவரும் திமுக தரப்பிடம் பேசியபோது, நாங்க அவுங்க மூவ்வை கவனிச்சிக்கிட்டுத்தான் வர்றோம். அவுங்க இங்கிருந்து இழுக்கறதுன்னு அவுங்க கவுன்சிலர்களை பத்திரமா பார்க்காம விட்டுடப்போறாங்க என்கிறார்கள் சிரித்தபடியே. அதாவது திமுக நிர்வாகிகள், அதிமுகவை சேர்ந்த ஐந்து கவுன்சிலர்களிடம் பேசி 3 கவுன்சிலருக்கு லகரங்களில் செட்டில் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.
திமுகவுக்கு பலத்தை காட்டவேண்டும் என்கிற எடப்பாடியின் ஆசை நிறைவேறுமா என்பது இந்த வாரத்தில் தெரிந்துவிடும்.