
இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு இன்று (27-04-25) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறக் கூடிய அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும், சிவானந்தா காலனி பகுதியில் திராவிட தமிழர் பேரவை சார்பில் பொது மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வந்த போது விமான நிலைய வளாகத்திலிருந்த கட்சி தொண்டர்கள் அதிகளவில் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வரைக்கும் அவர் ரோடு ஷோ நடத்தினர். அப்போது ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில் கோவையில் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக, கோவை வந்த அக்கட்சித் தலைவர் விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி ஓய்வு எடுக்கச் சென்ற தனியார் விடுதி வரையில் திறந்தவெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவரது கட்சித் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.