
சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அதிமுகவில் நடக்கின்ற பூத் கமிட்டி தேர்வுதான் ஒரிஜினல். உண்மையான நிர்வாகிகள், படித்தவர்கள், இளைஞர்கள், தங்களை அ.தி.மு.க என்றஇயக்கத்தில் இணைத்துக்கொண்டு, உறுப்பினர் படிவங்களைப் பூர்த்திசெய்து கொடுத்து, ஆதார் எண், உறுப்பினர் எண் எல்லாம் கொடுத்து, நம்பிக்கையுடன் வருகிறார்கள். விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் கிடையாது. அது ஒரு பொதுக்கூட்டம். விஜய் கட்சியில் பூத் முகவர்கள் போர் வீரர்கள் என்றால், அதிமுகவில் பூத் முகவர்கள் அனைவரும் பல களம் கண்ட போர்ப்படை தளபதிகள். வெல்லப்போவது யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விஜய் ஒரு மிகச் சிறந்த நடிகர், செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரைப் பார்ப்பதற்கு எல்லோரும் வருவார்கள். சிவகாசிக்கு வந்தால் நானும்கூட ஓரமாக நின்று அவரைப் பார்ப்பேன், அவருடைய பேச்சைக் கேட்பேன். அதையெல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது.
தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் நேரத்தில் நடிகர் வடிவேலுவுக்குக் கூடிய கூட்டத்தைக் கண்டு நாங்களே அரண்டுபோனோம், ஆனால் அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். நடிகருக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறியது எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிந்துவிட்டது. எம்ஜிஆர், தனது 20 ஆண்டு அரசியலில் பல கருத்துகளை திரைப்படம் வாயிலாகச் சொல்லி, இளைஞர்களைப் பக்குவப்படுத்தி, நாட்டு மக்களை அரசியல் மீது அக்கறை கொண்டவர்களாக மாற்றி, அரசியல் அரங்கில் விளையாட வைத்து, அதற்குப் பின்னர் அரசியலுக்கு வந்ததால் எம்ஜிஆர் மிகப்பெரிய வெற்றி பெற்றார். எம். ஜி.ஆரை போல் வந்துவிடலாம் என்று நடிகர்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு, அது நடக்கவே நடக்காது, வாய்ப்பே கிடையாது. அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று வரும் இளைஞர்கள், படித்த பட்டதாரிகள் அனைவரும் மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும், அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகிறார்கள்.
அதிமுகவின் பூத் கமிட்டி முகவர்கள் அனைவரும் விருச்சிகமாக வளரக்கூடிய ஆணித்தரமான விதைகள். திமுகவை எதிர்க்கும் எந்தக் கட்சியும் அதிமுக கூட்டணியில் சேரலாம். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகவும் தளபதியாகவும் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளார். அதைத்தான் அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள். திமுக எதிர்ப்பாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் கொள்கை, எண்ணம். அந்தக் கொள்கையில் நடிகர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுகவிற்கு யாராலும் பாதிப்பு வராது. நாட்டு மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் தளமாக அதிமுக இருக்கும் என்பதால், இளம் வாக்காளர்களும் அவ்வாறு கருதுவதால், அதிமுக பக்கமே இளைஞர்கள் கூட்டம் அதிகமாக வரும். அதிமுகவிற்கு யாராலும் எந்தப் பாதிப்பும் வராது. மற்றவர்களை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” என்றார்.