Skip to main content

அப்பட்டமான பொய்யை சொல்லுகிறார் நிர்மலா சீதாராமன் -மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

கோயம்புத்தூரில் புதன்கிழமை (27-02-2019) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
 

அப்போது அவர், “ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான ஆட்சி தான் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சி.  ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் தான் நரேந்திர மோடியின் மத்திய ஆட்சி, எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க ஆட்சி. அதனால் தான் இன்றைக்கு இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொள்கை முழக்கமாக வைத்து மாநாடு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
 

இந்தியாவை மீட்போம் என்றால் யாரிடம் இருந்து மீட்பது?
 

இந்தியாவின் தேசபக்தர்களாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு இந்தியாவை ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விலை பேசி விற்றுக்கொண்டு இருக்கின்ற நரேந்திர மோடி கூட்டத்திடம் இருந்து இந்தியாவை மீட்டாக வேண்டும் என்று நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்.


mkstalin 81



‘என்னுடைய ஆட்சி தான் ஊழல் இல்லாத ஆட்சி' என்று சொல்கிறார் நரேந்திர மோடி. அப்படியானால் ரஃபேல் விவகாரம் என்ன? ஊழல் இல்லையா? ரஃபேல் ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கின்ற எந்தக் கேள்விக்காவது அவர்களால் நேரடியாக பதில் சொல்ல முடிந்ததா? ஒரு சதவிகிதம், இரண்டு சதவிகிதம் அல்ல, 41 சதவிகிதம் விலை உயர்வு கொடுத்து விமானங்களை வாங்கி இருக்கிறார்கள். யாருக்கு அந்த லாபம் செல்கிறது. ஒரு தனியார் நிறுவனத்துக்கு. இது ஊழல் இல்லையா?

 

அண்மையிலே பெங்களூருவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 'மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவில் எந்த ஊழலும் நடைபெறவில்லை' என்று பேசி இருக்கிறார். பாதுகாப்புத் துறையில் நடந்த இந்த ஒரு ஊழல் போதாதா? அது ஊழல் கிடையாதா?
 

இந்த செய்தி வெளியான நாளிதழ்களின் இன்னொரு பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால்,
 

'ஐந்து விமான நிலையங்களின் பராமரிப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைப்பு' என்று செய்தி வெளியாகி இருக்கிறது. இந்திய விமான ஆணையகம் நிர்வகிக்கும் பெருநகரங்கள் அல்லாத 6 விமான நிலையங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் விடுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு முடிவெடுத்ததாகவும் அதில் ஐந்து விமான நிலையங்களை பராமரிக்கும் ஏலத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பதாக முடிவெடுத்திருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
 

குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்து பிரதமர் ஆனபிறகும் ஒரே நபருக்கு பல்வேறு தொழில் முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்றால் அது ஊழல் அல்லாமல் வேறு என்ன? எங்களுக்கு எல்லாம் என்ன சந்தேகம் என்றால், அந்த நிறுவனமே மோடிக்குச் சொந்தமானது தானோ என்ற சந்தேகம் தான்.
 

ஆகவே, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று சொல்லி இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கின்ற ஆட்சி தான் பா.ஜ.க ஆட்சி. நரேந்திர மோடி ஊழலிலும் 'ஒரே நிறுவனம்' என்று முடிவெடுத்துச் செயல்படுகிறார். நரேந்திரமோடியின் ஆட்சியில் ஊழல் ஒருமுகப்பட்டு ஒரே இடத்தில் குவிந்துள்ளது. அதுதான் உண்மை.
 

இன்னொன்றையும் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். என்ன தெரியுமா? 'இப்போது காஷ்மீரில் நடந்துள்ள தாக்குதலைத் தவிர வேறு எந்த தாக்குதலும் பா.ஜ.க ஆட்சியில் நடக்கவில்லை' என்று பச்சைப் பொய்யை சொல்லியிருக்கிறார். அந்த பச்சைப் பொய்யை சொல்லியிருக்கும் நிர்மலா சீதாராமன் அவர்களின் கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன்.

 

nirmala-sitharaman


2014ம் ஆண்டு உரியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 2016ம் ஆண்டு பாமேபரில் நடந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இரண்டு பேர் மாண்டு போயிருக்கிறார்கள். அதே 2016ம் ஆண்டு ஜம்மு ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். இப்போது 44 வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
 

அதில் இரண்டு பேர் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள். ஒருவர் அரியலூர் மாவட்டம் இன்னொருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர். அந்த இரண்டு வீரர்களின் வீட்டுக்கும் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் வந்திருக்கிறேன். இத்தனை தாக்குதல்கள் நடந்திக்கிறது, இதையெல்லாம் மூடி மறைத்து எந்த தாக்குதலும் நடக்கவில்லை என ஒரு அப்பட்டமான பொய்யை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் சொல்லுகிறார் எனச் சொன்னால் இது எதை காட்டுகிறது?
 

ஆகவே, நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். இந்தியாவில் நடைபெறும் இந்த பா.ஜ.க ஆட்சி கார்ப்பரேட்டுகளால் கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் கார்ப்பரேட் ஆட்சி. இந்த ஆட்சி தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை தான் செய்துகொண்டு மாண்டு போவார்கள்.

இந்த ஆட்சி தொடர்ந்தால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டிகளை தான் திறப்பார்கள். இந்த ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது. இந்த ஆட்சி தொடர்ந்தால் ஒரு அனிதா இல்லை, தொடர்ந்து பல அனிதாக்கள் தற்கொலை தான் செய்து கொள்வார்கள். இந்த ஆட்சி தொடர்ந்தால் மாநிலங்களுக்கு முறையாக மத்திய அரசு தரவேண்டிய எந்த நிதியும் கிடைக்காது.
 

மொத்தத்தில் மோடி அரசு என்பது இந்தியாவில் உள்ள தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்புக்கும் ஆபத்தான ஆட்சி. அதனால் தான் அதனை வீழ்த்துவதற்கு நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம்''. இவ்வாறு பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்