நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர அனைத்து தொகுதியிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்ததால் ஆட்சியை காப்பாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். ஒரு தொகுதியில் மட்டுமே தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவதற்கான வழிகளை பாருங்கள் என நிர்வாகிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சிலர் சரியாக பணியாற்றவில்லை என்றும், கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போதே சிலர் சரியாக பணியாற்றவில்லை என்ற தகவலும் ஆதாரங்களுடன் தலைமைக்கு வந்துள்ளது. வேலூர் தேர்தல் நெருங்கிவிட்டதாலும், தேர்தல் பணியில் எந்த பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அதிமுக தலைமை தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக அனைத்து மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் மாற்றத்தை ஏற்படுத்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.