Skip to main content

அமைச்சர்கள் பங்கேற்கும் தனியார் நிகழ்ச்சிகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்! – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020

 

அமைச்சர்கள் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் உரிய சமூக இடைவெளியோ, கரோனா தடுப்பு நடவடிக்கைகளோ பின்பற்றப்படவில்லை.  இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் ஆஜராகி, முதலமைச்சர் தனது கடமையைச் செய்து வருகிறார். மனுதாரர் டிராஃபிக் ராமசாமிக்கு, ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்குகளைத் தள்ளுபடி செய்து அபராதம் விதித்துள்ளது. இன்னும் அந்த அபராதத் தொகையைக் கட்டவில்லை. எனவே,  இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதே வேளையில், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அரசு விழாக்களில் பங்கேற்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால், தனியார் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் போது கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
 

 

சார்ந்த செய்திகள்