தேனி பாராளுமன்றத் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பிஜேபி கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் உள்பட சில சுயேச்சைகளும் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான், போடி உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சிக்காரர்களும் பெருந்திரளாக தேனி பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தனர். அப்பொழுது வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் அமைச்சர்களான ஐ. பெரியசாமி மற்றும் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களை மக்கள் மலர் தூவியும் வாழ்த்தியும் மேளதாளத்துடன் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியர் சஜிவனாவிடம் தனது வேட்பு மனுவை அமைச்சர்களான ஐ. பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பின் வெளியே வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பட்டு வேஷ்டி போத்தி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.