கோவை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நுகர்வுப் பொருள் வாணிப அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர்கள் சக்கரபாணி, செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோதுமையைப் பொறுத்த அளவில் மாத ஒதுக்கீடு 23 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. அதை மத்திய அரசு 8 ஆயிரம் மெட்ரிக் டன்னாக குறைத்துவிட்டது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்கள் நுகர்வோர் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் வரும் செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு சென்று, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் எங்களுக்கு தேவையான அரிசியை தருகிறீர்களா அல்லது நாங்களே வாங்கிக் கொள்ள எங்களை அனுமதிக்குமாறு கேட்க இருக்கிறார். விரைவில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு கோதுமை தட்டுப்பாடு இல்லாதவாறு அது நிவர்த்தி செய்யப்படும்.
மண்ணெண்ணெய், கலைஞர் காலத்தில் இருந்ததை விட அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்பட்டு நாங்கள் ஆட்சியில் அமரும்போது 8 ஆயிரத்து 576 கிலோ லிட்டராக இருந்தது. கடந்த ஆண்டு அதை 4 ஆயிரத்து 520 கிலோ லிட்டராக குறைத்தார்கள். இந்தாண்டு அதை 2712 கிலோ லிட்டராக குறைத்து விட்டார்கள்.
அரசு நிதி நெருக்கடியில் இருந்தாலும் வெளி மார்க்கெட்டில் என்ன விலையாக இருந்தாலும் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவற்றை வாங்கி மானிய விலையில் கொடுத்துக்கொண்டு இருந்தோம். மண்ணெண்ணெய் பொறுத்தவரை அதைக் கொடுக்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு உள்ளது. விற்பனை விலையில் மத்திய அரசிடம் இருந்து வாங்கி மக்களுக்கு மானிய விலையில் கொடுக்கிறோம். ஆனால் அதை ஒதுக்கீடு செய்வது மத்திய அரசு தான். தமிழக அரசை வஞ்சிக்கிறது” எனக் கூறினார்.