மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தினை அறிவித்திருந்தன. இந்த நாடு தழுவிய போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தொழிற்சங்கங்களால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நாளில் போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்தவித விடுப்பும் அளிக்கக்கூடாது. அந்த தேதியில் ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பேருந்துகள் இயக்கப்படாத சூழல் ஏற்பட்டால் பயணிகளுக்குச் சிரமம் ஏற்படும் எனவே வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள அந்த நாட்களில் ஊழியர்கள் தவறாமல் பணிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை வாயிலாக மதுரை போக்குவரத்து கழகம் நேற்று அறிவுறுத்தி இருந்தது. அதேபோல் மின்துறை பணியாளர்களுக்கும் இதேபோன்ற அறிவிப்பை மின்சாரத்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ் விலை உயர்வு காரணத்தால் தமிழகத்தில் பால், பேருந்து கட்டணம் உயர வாய்ப்பிருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்டு போராடி வருவதால் பால், பஸ் கட்டணம் உள்ளிட்டவற்றில் சிறிய மாற்றம் இருக்கும். விலையேற்றத்தை வேண்டுமென்றே அரசு திணிப்பதில்லை. அதிமுக ஆட்சியில் விலையை ஏற்றவில்லையா? ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் வரும்பொழுது மக்கள் அதை சந்திக்கத்தான் வேண்டும். பால் விலை, பஸ் கட்டணத்தில் வரும் மாற்றம் குறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார்'' எனக் கூறியுள்ளார்.