தமிழ் மொழி மேம்பாட்டிற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி கடலூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இத்தனை காலமாக மூன்றாவது மொழி இந்தி என்பதை எடுத்துவிட்டு பிரதமர் மோடி மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் பயிலலாம் எனச் சொன்னார். இங்கிலாந்தில் ரிஷிசுனக் பிரதமர் ஆனதிற்கு முதல்வர் ஸ்டாலின் மிகுந்த சந்தோசப்படுகிறார். முதல்வர் ரிஷிசுனக்கிற்கு போன் பண்ணிக் கேளுங்கள். எத்தனை மொழி பேசுவீர்கள் என்று. எல்லோரும் ஒரு மொழி இரண்டு மொழி பேசிவிட்டு பிரதமர் ஆனார்களா?
தமிழகத்தில் பாஜகவின் போராட்டம் என்பது முதலும் கடைசியுமாக இருக்கட்டும். மீண்டும் இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ஆங்கிலத்தை புகுத்த முயற்சித்தால் மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடும் அளவிற்கும் பேசும் அளவிற்கும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் அவர்கள் பேசுவதை கேட்பதற்கு தயாராக இல்லை.
கடலூருக்குள் விட மாட்டேன் என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சொல்கிறார். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. கடலூரில் பாஜக வந்து விட்டது. நாங்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை வர முடியாது என சொல்லவில்லை. நீங்கள் வர வேண்டும். நீங்கள் பேச வேண்டும். அப்பொழுது தான் உங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியும். நீங்கள் தமிழை எப்படி கொச்சைப் படுத்துகிறீர்கள் எனத் தெரியும். நீங்கள் பிற மாவட்டங்களுக்கு போகும் பொழுது தான் நீங்கள் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்பது தெரியும். இன்னும் கொஞ்ச நாள் எம்.எல்.ஏ.வாக இருப்பீர்கள். ஆண்டு அனுபவித்துவிட்டு போய்விடுவீர்கள். அதன் பின் மக்கள் அடுத்த தேர்தலில் உங்களை வீழ்த்தப் போவது உறுதி. டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப் போவீர்கள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக அமித்ஷா சொல்லுகிறார். சென்னையில் என்.ஐ.ஏ அமைப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளோம் என்று. முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகு என்.ஐ.ஏ அமைப்பிற்கு போலீஸ் ஸ்டேசன் அந்தஸ்து கொடுக்கப்படவில்லை. இன்று கோவையில் நடந்ததன் காரணம் என்.ஐ.ஏ அமைப்பிற்கு தமிழகத்தில் அதிகாரம் கொடுக்காதது தான்.” எனக் கூறினார்.