எனக்கு மோடி கூறிய அறிவுரைகளை அவரே நினைத்துப் பார்க்கும் நிலையில் நடந்துகொள்கிறார் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதமராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்மோகன் சிங். அவரது ஆட்சிக்காலத்தில் நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் மன்மோகன் சிங் வாய்திறப்பதில்லை என பலரும் விமர்சித்து வந்தனர். அதை பயன்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி ‘மவுன மன்மோகன் சிங்’ என விமர்சித்திருந்தார்.
இதற்கு தற்போது பதிலடி தரும் விதமாக பேசியிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘நான் ஒன்றும் பேசுவதில்லை என மோடி என்னை விமர்சித்திருந்தார். அந்த அறிவுரை என்னைவிட அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதை அவரே பின்பற்றிக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நாட்டில் நடந்துகொண்டிருக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்து அவர் வாய்திறந்தது பாராட்டுக்குரியது. ஆனால், அது மிகமிக தாமதமான கண்டனம். இதுபோன்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் குற்றங்களுக்கு எதிராக குரல்கொடுக்கவில்லை என்றால், அது குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமானதாக மாறிவிடும் வாய்ப்புள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சிறுபாண்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான அடாவடிகள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் என இந்த ஆட்சியின் அத்தனை அடாவடிகளுக்கும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் விடையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.