Skip to main content

நபிகளை கார்ட்டூன் வரைவதா? - த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம்!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

dddd

 

பிரான்சில் இருந்து வெளிவரும் 'சார்லி ஹெப்டே' என்ற பத்திரிகை, இஸ்லாமிய மார்க்க நெறிகளுக்கு மாறாக நபிகள் நாயகத்தின் உருவத்தைக் கேலிச்சித்திரமாக வரைந்து, ஒட்டுமொத்த உலக முஸ்லீம்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதைக் கண்டித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா சுடச்சுட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

 

அது...

 

நபிகள் நாயகம் பற்றிய கேலிச் சித்திரத்தை பிரெஞ்ச் பத்திரிகையான சார்லி ஹெப்டே வெளியிட்டிருப்பதும் அதற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்ரோன் தலைமையிலான அரசு ஆதரவு அளிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க கொடுஞ்செயல்கள் ஆகும்.

 

பிரான்ஸ் அரசின் இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடி என்ற அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் 'நைஸ்' நகரில் ஒரு தேவாலயத்தில் புகுந்து ஒரு பெண் உட்பட மூன்று நபர்களைப் படுகொலை செய்ததும் மன்னிக்கமுடியாத, வன்மையாகக் கண்டிக்கத்தக்க படுபாதகச் செயல் ஆகும்.

 

இதேபோல், பாரீஸ் நகரில் புறநகர்ப் பகுதியில் ஒரு பள்ளிக்கூட வகுப்பில் சாமுவேல் பட்டி என்ற ஆசிரியர், நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்களை வகுப்பில் காட்டிய தவறான செயலுக்காக, அவரது தலையை வெட்டியிருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை ஆகும்.

 

இத்தகைய வன்முறைக்கும் கொலைவெறிக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் அணுவளவும் இடமில்லை. ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் அனைவருக்குமான ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர் கருணையுடன் நடக்க வேண்டும் என்று போதித்து, அந்த அடிப்படையில் ஆட்சி செய்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறமதத்தவர்களிடம் கருணையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் ஆட்சி செய்த ஸ்பெயின் யூதர்களுக்கு சுவர்க்க பூமியாக இருந்தது என யூரி அவ்னெரி என்ற இஸ்ரேல் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளரும் குறிப்பிட்டுள்ளர்.

 

Ad

 

பன்முகச் சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படைகளை வகுத்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்களை பிரான்ஸ் அரசு ஊக்குவிப்பதும் இதற்கு எதிர்வினையாக இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளையும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களையும் புறந்தள்ளிவிட்டு வன்முறையைக் கையில் எடுத்துக் கொலை பாதகச் செயலில் ஈடுபடுவதும் மனிதநேயத்திற்கு விரோதமான நடவடிக்கைகளே ஆகும்.

 

இந்தப் படுபாதகச் செயல்களின் பின்னணியில் உண்மையான இஸ்லாமிய அமைப்புகள் ஒருபோதும் இருக்கமுடியாது. பிரான்ஸ் வன்முறைகளையும் அதற்கு வழிவகுக்கும் பொறுப்பற்ற அரசாங்கத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

-ம.ம.க தலைவர்,

பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா..

 


 

சார்ந்த செய்திகள்