
திருநெல்வேலியில் அதிமுக கட்சிக்காரரின் இல்லத் திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
விழா முடிந்த பின் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக இருந்துள்ளது. அதிமுகவிற்கு யாரும் உதவியாக இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெறும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். அப்போது வரை பாஜக கூட்டணி தொடருமா என கேட்கின்றனர். அது நிலைக்கும். அது ஏன் இப்பொழுது தேவை. இப்பொழுது கூட்டணியில் தானே இருக்கிறோம். எங்கள் கூட்டணி தொடரும். பாஜக உடனான கூட்டணியில் என்ன நெருடலான உறவு. ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தன் கட்சியை வளர்க்கத்தான் பார்ப்பார்கள். அடுத்த கட்சி வளர தன் கட்சியை வைத்து நடத்திக் கொண்டு இருப்பார்களா?
அதுபோல் எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் தங்களது கட்சியை வளர்க்க பாடுபடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் திமுகவை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளை வைத்து திமுக தான் வளர்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கு கூட்டணிக் கட்சிகள் ஏதாவது குரல் கொடுத்ததா. சில தினங்களில் கூட்டணிக் கட்சிகள் காணாமல் போய்விடும்” எனக் கூறினார்.