Skip to main content

“மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” - ஓபிஎஸ் அதிரடி அறிக்கை

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

OPS Action Report “State Government should put pressure on Central Government”

 

சுங்கக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில், 01-04-2023 முதல் சுங்கக் கட்டணத்தை 10 விழுக்காடு வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

 

இந்தியாவிலேயே சுங்கச்சாவடிகள் அதிகம் இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதில் பெரும்பாலான சுங்கச் சாவடிகள் அதன் கால அளவைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை மூடப்பட வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கு எல்லாம் மதிப்பளிக்காமல் தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் தன்னிச்சையாக கட்டண உயர்விற்கு பரிந்துரை செய்வது என்பது விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் செயலாகும்.

 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சுங்கக் கட்டண உயர்வு என்பது மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் செயலாகும். இதன்மூலம் வாகன வாடகைக் கட்டணம் உயர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் நிலை ஏற்படும். சுங்கக் கட்டண உயர்வு என்பது ஒரு சங்கிலி இணைப்பைப் போன்றது. இதனைத் திரும்பப் பெற வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 01-04-2023 முதல் உயர்த்தப்படவிருக்கும் சுங்கக் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகளை குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்