Skip to main content

“என்கிட்ட இந்த கேள்விய கேட்குறிங்களே” - கே.என்.நேரு கிண்டல்!

Published on 30/01/2021 | Edited on 30/01/2021

 

KN Nheru press meet at trichy


இந்தியத் தேர்தல் ஆணையம், அந்தந்த மாவட்டங்களுக்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்திருக்கும் நிலையில், இன்று அந்த இயந்திரங்களைச் சரிபார்த்து இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடம் விளக்கப்பட்டது.


அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, “வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகளைப் பதிவு செய்து சரி பார்த்திருக்கிறோம். எல்லாம் சரியாகச் செயல்படுகிறது. இனி எல்லாம் வாக்காளர்கள் கையில்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார். 


மேலும் செய்தியாளர்கள், “சசிகலாவின் வருகை, அரசியல் விபத்தை ஏற்படுத்திவிடுமா?” என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த கே.என்.நேரு, “நான் ஒரு சாதாரண ஆளுங்க, என்னிடம் இந்த கேள்விகள் எல்லாம் கேட்பதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்று கூறினார்.


மேலும், திமுக மாநாடு குறித்த கேள்விக்கு, “வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், திருச்சியில் நடைபெறக்கூடிய மாநாடு குறித்து விரைவில் தேதியை அறிவிப்பார். தற்போது, மாநாடு நடக்கக் கூடிய இடத்தைத் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் கூறியதுபோல, நாங்கள் ஒன்றும் தபால்காரர் பணியைச் செய்யவில்லை. பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய எந்த மனுக்களாக இருந்தாலும் 100 நாட்களுக்குள் அதற்கு தீர்வுக்கான, ஸ்டாலின் தனி இலாகாவை அமைத்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவார்.


முதலமைச்சர் தனிப்பிரிவு என்பதை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது திமுகதான். எனவே, இந்தப் பிரிவைக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை 100 நாட்களில் நாங்கள் தீர்த்து வைப்போம். கடந்த பத்து ஆண்டு காலம் நாங்கள் ஆட்சியில் இல்லை என்றாலும் அதிமுகவால் செய்துமுடிக்க முடியாத பணிகளை நாங்கள் கண்டிப்பாக இந்த 100 நாட்களுக்குள் செய்து முடிப்போம்” என்றார்.

 

மேலும் செய்தியாளர்கள், “ஐ-பேக் நிறுவனம்தான் திமுக தலைவர் ஸ்டாலினை இயக்குவதாகக் கூறுகின்றனர். இதே விஷயத்தை தான் கனிமொழியும், திமுக தலைவர் ஸ்டாலின் ஐ-பேக் நிறுவனம் சொல்வதை மட்டும் கேட்பதாகக் கூறி இருந்தார். இதில் உங்களுடைய கருத்து என்ன” என்ற கேள்விக்குப் பதில் அளித்த கே.என்.நேரு, “ஐ-பேக் நிறுவனத்தைச் செயல்படுத்துபவர் யார் என்றால் ஸ்டாலின்தான். எனவே, நீங்கள் கூறியதுபோல் எம்.பி. கனிமொழி சொன்ன, எந்தப் பதிவையும் நான் இதுவரை படிக்கவும் கேட்கவும் இல்லை” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்