பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நாளிதழ் ஒன்றிக்கு பேட்டி அளித்தபோது, பின்லாந்து சென்று வந்தது குறித்து கூறியுள்ளார்.
அதில், பின்லாந்து நாட்டின் கல்வி முறைகளை பார்வையிட்டு, தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக அந்த நாட்டுக்கு சென்றிருந்தோம்.
பின்லாந்து நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம்தான். அங்குள்ள பள்ளிகளை பின்லாந்து அரசே நடத்தி வருகிறது. பள்ளிக்கூட நடைமுறைகளின்படி பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என்ற வரிசையில் வகுப்பறைகள் உள்ளன. அங்கிருந்தே வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலன், ஆரோக்கியம், வாழ்க்கை நடைமுறைகள், சுகாதாரம் கற்றுத் தரப்படுகிறது.
அங்குள்ள அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு 2 வேளை உணவு, படுக்கை வசதிகள் அளிக்கப்படுகின்றன. 6 வயதுக்குப் பிறகுதான் கல்வி கற்கத் தொடங்குகின்றனர். அதுவரை விளையாட்டுதான். 6 வயதுக்கு மேல்தான் வகுப்பறைகளில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. 15-ம் வயதில் 9-ம் வகுப்புக்கு வரும்போது திறன் பயிற்சி அளிக்கின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மருத்துவம், பொறியியல் போன்ற பெரிய கல்விகளை அவர்களே விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்கின்றனர். விருப்பத்துடன் தேர்வு செய்வதால் அந்தப் பாடங்களை நன்றாக கற்கின்றனர்.
18 வயதில் அவர்கள் தங்களின் பெற்றோரை நம்பி வாழும் வாழ்க்கையை துறந்துவிடுகின்றனர். அங்கு இருக்கும் அதே நிலையை இங்கு கொண்டு வர வேண்டும் என்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை.
நான் பார்த்துவிட்டு வந்த விஷயங்கள் பற்றி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளேன். பின்லாந்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம்தான் உள்ளது. அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம். அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள்.
பின்லாந்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்வதில்லை. ஏனென்றால் அங்கேயே அவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. அவர்களுக்குத் தேவையான மகிழ்ச்சி அங்கேயே இருக்கிறது. மகன், மகளுக்காக சொத்து சேர்க்க வேண்டும் என்றெல்லாம் பதற்றமடையத் தேவையில்லை.
கல்வியை அரசே அளித்துவிடுகிறது. வேலையும் கிடைத்துவிடுகிறது. 60 வயதைத் தாண்டிவிட்டால், அவர் பணக்காரர் என்றாலும் ஏழை என்றாலும் ஓய்வூதியத்தை அரசு வழங்கிவிடுகிறது. பின்லாந்தில் பிறப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்றது. அங்குள்ள தட்பவெப்ப நிலையும் மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.