தமிழக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்.பி.யும், மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், நேற்று (நவம்பர் 16 ஆம் தேதி) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காக அவரை வாழ்த்தி அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுக இளைஞரணியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக, 'தமிழகத்தின் நாளைய முதல்வர்' என்று அவரது ஆதரவாளர்கள் சென்னையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதுவும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திமுகவை வம்புக்கு இழுக்க, திட்டமிட்டே இந்த போஸ்டர்களை கார்த்தி ஆதரவாளர்கள் ஒட்டியிருப்பதாக திமுகவுக்கு காங்கிரசிலிருந்தே தகவல் போயிருக்கிறது. உதயநிதி தொகுதியில் இந்த போஸ்டர்களை கண்ட அத்தொகுதியின் திமுகவினரிடமும் திமுக இளைஞரணியிடமும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வரும் நிலையில், கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்குகிறார்கள் என்று திமுகவினரும் காங்கிரசில் உள்ள சிதம்பரம் எதிர்ப்பாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர், காங்கிரசின் அகில இந்திய தலைமையின் கவனத்துக்கு இந்த போஸ்டர் விவகாரத்தை கொண்டு சென்றிருப்பதுடன், "இந்த போஸ்டர் விசயத்தை திமுக ரசிக்கவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனையை உருவாக்குவதற்காகவே கார்த்தி சிதம்பரம் தரப்பினர் இந்த கலாட்டாவை ஆரம்பித்துள்ளனர். இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்" என்றும் தலைமையிடம் சொல்லியிருக்கிறார்களாம்.