கோவையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டம் கோவை தனியார் மண்டபத்தில் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான பணிகள் குறித்து விவாதித்து வருகின்றன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்ட ஒற்றுமைப் பயணத்தின் போதும் அதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கோவையில் தனியார் மண்டபத்தில் கோவை மற்றும் சேலத்தில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நாடாளுமன்ற தேர்தல் குறித்து முடிவுகள் எடுக்கப்படவில்லை. முடிவுகள் விரைவில் எடுக்கப்படும். நடந்த கூட்டம் நீங்கள் பேசிய கூட்டம் அல்ல. அது குறித்து இனிமேல் தான் பேச வேண்டும். அது இனிமேல் தான் நடக்கும். சட்டமன்றத்தில் விட்டதை நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிடிக்க திட்டமிடுவதாகச் சொல்கிறார்கள். அது நல்ல எண்ணம் தான். அவ்வாறும் இருக்கலாம்” எனக் கூறினார்.