தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த 13ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தங்கள் ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது திமுக அரசு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டும் அதற்கடுத்த நாளான 14ஆம் தேதி வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (07.09.2021) நடந்த மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அதிமுக உறுப்பினர் சுந்தர் ராஜன் பேசினார். அப்போது, “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “அதை திருமணம் நடக்கும் நேரத்தில் சரியாக கொடுக்க வேண்டும். ஏற்கனவே, அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்படுள்ளது. அதை முறையாக வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.”என்றார். அதற்கு உறுப்பினர் சுந்தர்ராஜன், “கரோனா காலம் என்பதால் அதை அப்போது வழங்க முடியவில்லை” என்றார்.
பின்னர் பேசிய பழனிவேல் தியாகராஜன், “அதற்கு முன்பே வழங்கப்படவில்லை. கடந்த ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எனது தொகுதிலேயே இந்தக் கோரிக்கையை வைத்தேன்” என கூறினார். இவற்றுக்குப் பதிலளிக்கும் விதமாக பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் கடந்த ஆட்சியில், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதமே நிறுத்தப்பட்டுவிட்டது. மொத்தம் 3 லட்சத்து 34ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. தாலிக்கு வழங்கும் தங்கத்தை 8 கிராமாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார்களே தவிர, அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இப்போது முதலமைச்சர் 232 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளார்.