Skip to main content

“கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு, மன்னிக்க முடியாத குற்றம்” - ஜோதிமணி எம்.பி. காட்டம்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Jyothimani MP tweet about release six peopleRajiv Gandhi case

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் முருகன் உள்ளிட்ட நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக வந்த பாஸ்போர்ட் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை முடியும் வரை இந்த நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. 

 

இதனிடையே இவர்களின் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இவர்களின் விடுதலை குறித்து தனது ட்விட்டரில், “ராஜீவ்காந்தி கொலையாளிகள் உச்சநீதிமன்றத்தால் நீண்டகாலம் தண்டனை அனுபவித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த கொடிய குற்றத்தில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அந்த மனிதவெடிகுண்டு ராஜீவ்காந்தியை மட்டுமல்ல, பல தமிழர்களையும் பலிகொண்டு விட்டது. குண்டுவெடிப்பில் தங்கள் உயிருக்குயிரானவர்களை பலிகொடுத்த குடும்பங்கள் இன்னும் ஆறாத காயத்தோடு இதே தமிழ்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஊடகங்களும், சில தனிநபர்களும் கொலையாளிகளைக் கொண்டாடுவது மாபெரும் தவறு. மன்னிக்க முடியாத குற்றம்.

 

காந்தியைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகிற ஆர்.எஸ்.எஸ். பாஜகவிற்கும், இன்று ராஜீவ்காந்தி கொலையாளிகளைக் கொண்டாடுபவர்களுக்கும் என்ன வேறுபாடு? கருணை அடிப்படையில் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், குற்றவாளிகளைக் கொண்டாடுவது அநாகரிகமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்