காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நடத்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தற்பொழுதும் இந்த நாட்டில் பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தைத் தெரிவித்து 45 நாட்கள் ஆகிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களைத் தருமாறு கடந்த 16 ஆம் தேதி ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டிற்குச் சென்ற டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ஒற்றுமை யாத்திரையின் போது தம்மைச் சந்தித்த பெண்கள் யார் யார் என்பது குறித்து தகவல்களைப் பெற காலஅவகாசம் வேண்டும் என ராகுல் காந்தி கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவிக்கையில், "ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை 46 நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்துவிட்டது. இப்போது வந்து ராகுல் காந்தி யாரை எல்லாம் சந்தித்தார் என்று கேட்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சந்தித்து தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டனர். தற்போது வந்து டெல்லி போலீசார் ராகுலை சந்தித்தவர்களை அடையாளம் காட்டச் சொல்கிறார்கள். இதன் மூலம் எங்களை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. இதனை உறுதியோடு எதிர்த்து நிற்போம்" என்றார்.