மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அவரது போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டிடம் மற்றும் மரங்களுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, தற்போது வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘சொத்துகள் மீது உரிமையுள்ள தங்களிடம் கருத்து கேட்காமல் கையகப்படுத்திய நடவடிக்கை என்பது, நிலம் கையகப்படுத்துதல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு சட்டத்துக்கு முரணானது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட வீட்டை அரசு எடுத்துக் கொள்வது, ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக பாதிக்கும்.
மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. ஜெயலலிதாவுக்கு சொந்தமான மதிப்புமிக்க புராதன நகைகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல. இழப்பீட்டுத் தொகையில் இருந்து வருமான வரி பாக்கியை எடுக்க வருமான வரித் துறைக்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை. தனியார் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு உரிமை சட்டப்படி உரிமையில்லை. இது பொதுப் பயன்பாடும் அல்ல. எந்தச் சட்டவிதிகளும் பின்பற்றப்படவில்லை என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர், இழப்பீடு நிர்ணயித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், அசையும் மற்றும் அசையா சொத்துகளை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருவரும் அறக்கட்டளை துவங்கி சொத்துகளை அளிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இரு உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்கவே வழக்குத் தள்ளிவைக்கப்பட்டது.’ என வாதிட்டார்.
இருப்பினும் வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்த நீதிபதி, கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார்.