உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்ற ஆணைப்படி எல்லோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில் கழகத்தின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அவரது இமெயில், வாட்ஸ் அப் மூலமும் ஸ்பீடு போஸ்ட் போன்றவற்றின் மூலமும் தலைமைக் கழகப் பணியாளர்கள் மூலமும் நேரடியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி முழுமையான அளவு இந்தப் பணி செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கும் இந்த கடிதம் அனுப்பியாகிவிட்டது. அவர்கள் பரிந்துரைத்த வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும் உள்ளது. இடைத்தேர்தலை பொறுத்தவரை ஏழாம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள். அதற்குள் பாஜக அவர்களது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை ஆதரிப்போம் என சொல்கிறார். உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது (இந்த தீர்ப்பு இடைத்தேர்தலுக்கு மட்டும்). அந்த வழிமுறையின்படி தான் அதிமுக எல்லோருக்கும் அந்த கடிதத்தை முறையாக அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டால் அனுமதிப்பீர்களா என்று கேட்கின்றீர்கள். ஏழாம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள்; நீங்கள் கேட்கும் விஷயங்களை எல்லாம் முடிவு செய்ய வேண்டியது கட்சி; நான் கிடையாது. பாஜக, அதிமுகவின் இருதரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறது. கூட்டணியில் இருப்பதால் சில கருத்துக்களை சொல்லலாம். கருத்துக்களை சொல்லக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. கருத்துக்கள் சொல்வது என்பது வேறு தலையீடு என்பது வேறு. கருத்துக்களை சொல்லலாம் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் கட்சியின் விருப்பம்” எனக் கூறினார்.