இன்று (02-02-2021) காலை, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்நிலையில் தி.மு.க. தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆளுநர் பேசும்போது, மத்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். அதனால் தமிழகம் வளம்பெறும் என்று ஒரு கருத்தை அவர் பதிவு செய்தார்.
ஏற்கனவே இதே மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டை வெளியிட்டபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் மதுரைக்கு நேரடியாக வந்து அடிக்கல் நாட்டு விழா என்று ஒரு நாடகத்தை நடத்திவிட்டுச் சென்றார்.
அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது 2015, அடிக்கல் நாட்டியது 2019, இப்போது 2021, இதுவரையில் அந்தப் பகுதியில் ஒரு செங்கல்லைக் கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. இதுதான் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களின் லட்சணம். அதனால்தான் ‘லாலிபாப்’ என்று இந்தப் பட்ஜெட்டை நான் விமர்சனம் செய்தேன்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தியுள்ளார்கள். இதனால் விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்தப் பட்ஜெட் போடப்படவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக மத்திய அரசு இந்தப் பட்ஜெட்டை போட்டிருக்கிறது.
அது மட்டுமில்லாமல் ஆளுநர் பேசியதில், எனக்குப் பிடித்ததும் உண்மையானதும் என்னவென்றால், ‘இதுதான் கடைசி பட்ஜெட்’ என்று சொன்னார். அதுதான் உண்மை. அதனை உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம்.
அது மட்டுமின்றி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையைத் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையில் அதற்கும் எந்தவிதமான முறையான பதிலும் இல்லை. விடுதலை செய்வதற்கான சூழலையும் ஆளுநர் உருவாக்கவில்லை. எனவே அதையும் கண்டித்து நாங்கள் ஆளுநர் உரையை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து கூட்டத்தொடர் முழுமையையும் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்.
எனவே, இதை எடுத்துச் சொல்வதற்குச் சட்டமன்றத்தில் நிச்சயமாக எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதனால் நாங்கள் மக்கள் மன்றத்திற்குச் சென்றுவிட்டோம். மக்கள் மன்றத்தில் இதனை ஆதாரங்களோடு சொல்வதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால் இங்கிருந்து பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. ஏன் என்றால் பேசுவதற்கு நிச்சயம் அனுமதிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.