தமிழகமே உற்று நோக்கி வந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பெரியண்ணா வீதி வாக்குச்சாவடியில் வேட்பாளர்களின் முகவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதை முகவர் ஒருவர் பார்த்ததாகக் கூறி சக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த தேர்தல் அலுவலர் பெரியண்ணா வீதி வாக்குச்சாவடிக்குள் மறைப்பு ஒன்றை வைத்து மறைத்துள்ளார் என்றும், மேலும் இது போன்று செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அந்த முகவருக்கு தேர்தல் அலுவலர் அறிவுரை கூறிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.