சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
இதில், இன்று கொண்டுவரப்படவுள்ள 16 தீர்மானங்களையும் அதனோடு அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து எடுக்கப்பட வேண்டிய முக்கிய சாராம்சங்களையும் நத்தம் விஸ்வநாதன் முன்மொழிந்தார். அதனை வழிமொழிந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை நாயகன், அதிமுக நம்பிக்கை நாயகன் எடப்பாடி. அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ. இன்று கொண்டுவரப்படவிருக்கும் அனைத்து தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக நிறைவேற்றித்தருமாறு முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்” என்றார்.