Skip to main content

“எடியூரப்பாவின் குரலை மத்திய அமைச்சர் எதிரொலிப்பது அதிர்ச்சியளிக்கிறது...” - ராமதாஸ் 

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

"It is shocking that the Union Minister echoes Eduyurappa's voice ..." - Ramadoss

 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்துவருகிறது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு கடந்த வாரம் டெல்லி சென்ற தமிழ்நாடு நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அரசின் நீர்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஷெகாவத்தும் உறுதியளித்திருக்கிறார். இருப்பினும் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்த முதல்வர் ஸ்டாலின், 3 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில், இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அந்த அறிக்கையில் அவர், “மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். மேகதாது விவகாரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கோரிக்கையைத் தமிழ்நாடு நிராகரித்துவிட்ட நிலையில், அவரது குரலை மத்திய அமைச்சர் எதிரொலிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்கக்கூடாது என்றும், கர்நாடகத்துடன் மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்தக்கூடாது என்றும் நான் வலியுறுத்தி இருந்தேன். அதைத் தொடர்ந்து அண்மையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடகத்துடன் பேச்சு நடத்தப்படாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

 

ஆனால், கர்நாடகத் தலைநகரம் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத், ‘‘மேகதாது சிக்கலை இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தி தீர்க்க வேண்டும். கர்நாடகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை ஆய்வுசெய்து அம்மாநிலத்திற்கு மத்திய அரசு நீதி வழங்கும்’’ என்று கூறியிருக்கிறார். மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ‘‘மேகதாது அணையைக் கட்டியே தீருவோம். அதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுத் தருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இவற்றைப் பார்க்கும்போது, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறதோ? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

1892ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரி உள்ளிட்ட மாநிலங்களிடையே பாயும் எந்த ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதாக இருந்தாலும், அதற்கு கடைமடை மாநிலமான தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையும் கட்டக்கூடாது என்பதை உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் உறுதி செய்துள்ளன. மத்திய அரசும் பல்வேறு தருணங்களில் இந்த நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. 2015ஆம் ஆண்டில் பாமக மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில், அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் இதை உறுதி செய்துள்ளார். அதன்பின் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாத நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகமும் தமிழ்நாடும் பேச்சு நடத்த வேண்டிய தேவை எங்கு எழுந்தது?

 

மேகதாது அணை விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு ஆதரவான குரல்கள்தான். 1970களில் காவிரி சிக்கல் குறித்து தமிழகத்துடன் பேச்சு நடத்திக்கொண்டே காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே நான்கு அணைகளை கர்நாடகம் கட்டியது. அதைத் தடுக்காமல் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அதேபோன்ற துரோகம் இப்போதும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் மேகதாது அணை உட்பட காவிரி சிக்கல் தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு நடத்தக்கூடாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, பேச்சு நடத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.

 

மேகதாது அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதுதான் சட்டப்படியான இன்றைய நிலையாகும். இதை கர்நாடகம் மீறாமல் பாதுகாக்க வேண்டியதுதான் மத்திய அரசின் கடமையாகும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடகம் எத்தனை விண்ணப்பங்களை தாக்கல் செய்தாலும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லை என்றால் அவற்றை  மத்திய அரசு ஆய்வு செய்யாமலேயே நிராகரிப்பதுதான் நீதியாகும். இதைத் தவிர பேச்சுவார்த்தை - ஆலோசனை என்ற எந்தப் பெயரில் இதுகுறித்த விவாதம் நடைபெற்றாலும் அது இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் நீர்த்துப் போகவே வழி வகுக்கும்.

 

எனவே, மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளையும், 1892ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையும் செயல்படுத்தும் அமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். மாறாக, மேகதாது விவகாரத்தில், தமிழகத்தை பாதிக்கும் வகையில் கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார். 

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.