தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நினைவாக தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கும், ஈரோட்டிற்கும் வந்து பெரியாருக்கு மரியாதை செலுத்திவிட்டு, வைக்கம் நிகழ்வுகளை நடத்துவது என்று கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக கேரளா காங்கிரஸ் குழுவினர் இங்கு வந்திருக்கின்றனர். தமிழகம் அதில் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர் முத்துசாமி பங்கேற்று இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடுகளை செய்திருக்கின்றது.
வைக்கத்தின் போராட்டத்தினை கேரள காங்கிரஸ் ஆரம்பித்தது, அப்போது சிறு இயக்கமாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் அதில் கலந்து கொண்ட பிறகு தான் அதற்கு ஒரு பெரிய வீச்சு ஏற்பட்டது, மக்கள் இயக்கமாக மாறியது, இன்றைக்கும் பெரியார் என்று சொன்னால் வைக்கம் என்ற வார்த்தை தான் நினைவுக்கு வரும். தந்தை பெரியார் வைக்கம் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக ஆக்கினார். சமூக பிரச்சனையாக மாற்றினார். அதன் தாக்கம் இந்தியா முழுக்க சென்றது. காந்தியடிகளின் கவனத்தை ஈர்த்தது அதன் விளைவாக 5 ஆயிரம் ஆண்டுகளாக அனுமதிக்க முடியாத ஒரு இடத்தில் ஒதுங்கி நின்ற மக்கள் உள்ளே சென்று வழிபாடு நடத்தக்கூடிய ஒரு சிறப்பான நிலை ஏற்பட்டது. இதற்கு அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியாரின் பெரும் முயற்சி தான் காரணம்.
தமிழகம் எப்போதும் சமூக சீர்திருத்தத்தின் பக்கம் இருக்கிறது. சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. வைக்கத்தின் நினைவுகளை மீண்டும் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்” என அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், தில்லை சிவகுமார், கேரளா முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன், மாவட்டத் தலைவர்கள் மக்கள் ராஜன், சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மண்டல தலைவர்கள், ஜாபர் சாதிக் விஜயபாஸ்கர், கவுன்சிலர் ஈ.பி.ரவி, வக்கீல் ராஜேந்திரன் உள் பட பலர் உடன் இருந்தனர்.