Skip to main content

சுபஸ்ரீ மரண விவகாரம்; அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

Published on 15/01/2023 | Edited on 15/01/2023

 

Isha Yoga Center issue; Comment by Minister Anbil Mahesh

 

தஞ்சாவூர் ஆட்சியர் முயற்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். இதன் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவரது பெரும் முயற்சியில் பழமையான கட்டிடம் பயன்படுத்தாவிட்டால் அது வீணாகிவிடும் என்ற ஒரு கோணத்தில் யோசித்து அதை எப்படி மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்ற விதத்தில் சுற்றுலாத்துறை மற்றும் பிற துறைகளின் உதவியுடன் தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகத்தை இன்று மிகப்பெரிய தஞ்சாவூருக்கான அருங்காட்சியகமாக உருவாக்கியுள்ளார். சரஸ்வதி மகாலில் இருந்தும் சில பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாவட்ட மக்களாக இருந்தாலும் அவர்களின் கலாச்சார பண்பாட்டினை தெரிந்துகொள்ள வேண்டும். அதை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்

 

600லிருந்து 700 பறவைகள் இருக்கின்ற ராஜாளி பூங்கா என்ற பறவை பூங்கா ஒன்றை உருவாக்கியுள்ளார். இங்கிருக்கும் மக்களுக்குத் தெரியும் அது எப்படிப்பட்ட இடமாக இருந்தது என்று. அதை சிரமம் மேற்கொண்டு சுத்தம் செய்து ராஜாஜி பூங்கா என்ற பூங்காவினை உருவாக்கியுள்ளார். அதில் 20 நாடுகளைச் சார்ந்த பறவைகள் இருப்பதாகக் கூட அதை நிர்வகிக்கின்ற நபர் சொல்லியுள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் தான் மாதிரியான பறவைகள் பூங்கா இருக்கும். அங்கிருக்கும் பறவைகள் நம் மேல் அமர்வதும் அதற்கு உணவு கொடுத்து அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அப்படி இந்த ராஜாளி பூங்கா உள்ளது” எனக் கூறினார். 

 

அண்ணாமலை ஈஷா யோகா மையம் அருகில் நிகழ்ந்த பெண்ணின் மரணம் குறித்துப் பேசியதாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஈஷா யோகா மையம் குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரிய பதிலைக் கொடுத்துள்ளார். இவர்கள் வெளியில் ஏதோ நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாதிரி பேசிக்கொண்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கு என்று வரும்பொழுது கட்சி பாகுபாடு இல்லாமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பவர்தான் முதலமைச்சர். சட்ட ஒழுங்கை மீறுபவர்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லோருக்கும் எல்லாம் அதுதான் திராவிட மாடல் அரசு” - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Anbil Mahesh campaigned Everything for everyone is the Dravidian model govt

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 39, 40, 41, 42 ஆகிய வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அப்பொழுது திருவெறும்பூர் பகுதி கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஆகியோருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- எல்லோருக்கும் எல்லாம் என்று அமையப்பெற்றது தான் நமது திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிடமாடல் ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காகவே அரும்பாடு பட்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர். இந்தியா கூட்டணி வெற்றிபெறும் பொழுது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். தற்போது மார்ச் மாதம் வரை மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என தமிழக முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்க கூடியவர்கள் பெண்கள் தான் . ராகுல் காந்தியும் நமது தமிழக முதல்வரும் அண்ணன் தம்பியாய் இருந்து வருகின்றனர். எனவே மத்தியில் இந்தியா கூட்டணியான ஆட்சி அமைந்தால்தான் நமக்கு உண்டான அனைத்து கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நமக்குத் தேவையான நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமைத்து நிறைவேற்ற முடியும்.

இன்றைக்கு பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியை முற்றிலுமாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் கூறியது போல் மத்தியில் யார் வரவேண்டும் என்பதை காட்டிலும் மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் தான் இந்தத் தேர்தல். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான, சமத்துவநாளில் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியை மக்கள் அனைவரும் தூக்கி எறிய வேண்டிய தேர்தல் தான் இது.  எனவே மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து நாம் வாங்கும் 500 ரூபாய் சிலிண்டரை அடுப்பில் பற்ற வைக்க வேண்டும் என்றால் அதற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களாகிய உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் மாநகரச் செயலாளரும், மண்டல தலைவருமான மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சிவகுமார், 41 வது வட்ட செயலாளர் அப்பு என்கின்ற கருணாநிதி, 42 வட்டச் செயலாளர் புண்ணியமூர்த்தி தேர்தல் பொறுப்பாளர்களான மறைமலை, தனசேகர் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, தமிழ் மாணிக்கம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Next Story

“தொழிலாளர்களின் குரலாக ஒலிக்க துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அன்பில் மகேஷ்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Vote Durai Vaiko to be the voice of workers says Anbil Mahesh

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் துரை வைகோவுக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர் துரை வைகோ நேற்று பிரச்சாரம் செய்து தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொன்மலை ரெயில்வே பணிமனையின் ஆர்மரிகேட் பகுதியில் ரெயில்வே ஊழியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடா்ந்து பெரியார், அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து, பொன்மலை அடிவாரம், ஜீவாவீதி, கொட்டப்பட்டு காமன்மேடை, ஐஸ்வர்யாநகர், ரன்வேநகர், எம்.ஜி.ஆர்.நகர், பேன்சிநகர், பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருமலைநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, கம்பிகேட், மிலிட்டரி காலனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- தி.மு.க. என்றும் தொழிலாளர்கள் பக்கம் தான் நிற்கும். அதுபோல் தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் அங்கெல்லாம் வைகோ வந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். நெய்வேலியில் 30 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளிவிளக்கை ஏற்றியவர் வைகோதான். அந்த வகையில் அவருடைய மகன் துரை வைகோ தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தொழிலாளர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் மு.மதிவாணன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழககுமார், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநிலத் தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்துதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ் ராமன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கமான் வளைவு, சந்து கடை, அந்தோணியார் கோவில் தெரு, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தனர்.