குடியுரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை திருப்ப பெறக் கோரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 14 வது நாளாக நடந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "டெல்லியில் நடந்த போராட்டத்தில் 39 இஸ்லாமியர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது. இதில் ஒரு போலீஸ்காரர் உடல் பிரேதப் பரிசோதனை செய்தபோது அவரது உடலிலிருந்து காவல்துறையின் குண்டு தான் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர். அப்படியானால் வன்முறையை தூண்டயது யார் என்பது வெளி உலகிற்குத் தெரியும். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று சொன்ன நீதிபதியை ஏன் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றினார்கள்.
பாஜக கூட்டணியில் இருக்கும் நிதீஷ் குமார் கூட இந்த சட்டத்தை ஏற்க முடியாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். பாண்டிச்சேரியில் இந்த சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று அந்த மாநில முதல்வர் பகிரங்கமாக அறிவித்து விட்டார். ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய வல்லமை படைத்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏன் இந்த தீர்மானத்தை கொண்டுவர தயங்குகிறார்கள். நாங்கள் ஓட்டுப்போட்டு கோட்டைக்குப் போன எங்கள் தமிழக அரசு ஏன் தீர்மானம் நிறைவேற்ற வில்லை.
வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய பெண்களை அடித்து துரத்தினார்கள். அதன்பிறகு வலுப்பெற்ற போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது. முத்துப்பேட்டையில் 14வது நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இந்த கருப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஆனால் செவிசாய்க்கவில்லை. உயிர்ப்பலிகள் வாங்கியது போதும் கருப்பு சட்டத்தை திரும்பப் பெறுங்கள் அல்லது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்றது போல இஸ்லாமியர்களும் வெற்றி பெறுவார்கள்.
ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு என்றாலும் முன்னால் நின்று போராடுவேன் என்று சொன்னார். ஆனால் டெல்லியில் 39 உயிர்கள் போன நிலையில் பசப்பு நாடகமாடி இருக்கிறார். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். பின்னாலிருந்து இயக்குகிறது என்பதற்கு அவரது பேச்சு சான்றாக உள்ளது. அதேபோல ரஜினிக்கு வக்காலத்து வாங்கும் கமலின் பேச்சும் அப்படியே இருக்கிறது. அதாவது 16 வயதினிலே படத்தில் முதுகு பிடித்துவிடும் சப்பானியை போலத்தான் ரஜினியும் கமலும் பாஜக-வுக்கு முதுகு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் ஒப்புக்கு நடிக்கக் கூடாது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை அழித்துவிட்டு ஆட்சியும் நடத்த முடியாது.
50 ஆயிரம் ஆண்டுகள் மரபோடு நாங்கள் தமிழர்கள் ஒன்றாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் உயிர்கள் பறிக்கப்படுமானால் எங்கள் உயிரை தந்தாவது அவர்களை உயிர்களை காப்போம். டெல்லியில் 39 உயிர்கள் மட்டுமல்ல கூடுதலாகவும் போயிருக்கலாம் மறைக்கிறார்கள். டெல்லி தேர்தல் பாஜகவுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதை மோடி உணர வேண்டும். காவிரி பாதுகாப்பு வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் இதற்கு முன்பு ஏலம் எடுத்து விட்டோம் என்று இங்கே யார் வர நினைத்தால் அவர்களை இங்கிருந்து போக கூட விட மாட்டோம்" என தெரிவித்தார்.