
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தார். முன்னதாக டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிடச் செல்வதாகக் கூறியிருந்த நிலையில் அன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்திருந்தார்.
மேலும் தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதற்கு அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மீண்டும் செங்கோட்டையன் டெல்லி செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (31.03.2024) இரவு சென்னை செல்வதற்காக செங்கோட்டையன் ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்கள், “தொடர்ச்சியாக ஏன் மௌனமாகவே இருப்பதற்கான காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், “மௌனம் அனைத்தும் நன்மைக்கே” எனப் பதிலளித்துவிட்டு வணக்கம் வைத்தவாறே சென்றார். முன்னதாக கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாததால் அந்த நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்ததால் அதிமுகவில் சர்ச்சை வெடித்தது. அதன் நீட்சியாக ஏற்பட்ட சலசலப்பால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொழுது கூட எடப்பாடியை நேரில் சந்திப்பதைத் தவிர்த்த செங்கோட்டையன், மாற்றுப் பாதையில் சென்றதும் அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாகியது குறிப்பிடத்தக்கது.