சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து சமீபத்தில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா எம்.பி. பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பிரச்சாரத்தில், ஆ.ராசா பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த ஆ.ராசா, “நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, நான் பேசியதை வெட்டி ஒட்டி பரப்பி வருகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
நேற்று சென்னை திருவொற்றியூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்ட போது, “என் தாயை இழிவுபடுத்துகிறார்கள்” என்று தழுதழுத்த குரலில் பேசினார். இந்நிலையில் இன்று நீலகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆளுமையையும், முதல்வர் பழனிசாமி அரசியல் ஆளுமையையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி உவமானமாக நான் தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தேன். அதில் இருந்து சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காரணங்களுக்காக, சித்தரிக்கப்பட்டு தவறாகப் பரப்பியதை நான் விளக்கினேன். அது குறித்த விவாதங்கள் தொடர்ந்ததால், நேற்று கூடலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது எடப்பாடி பழனிசாமி குறித்தோ அவரது அம்மையார் குறித்தும் கலங்கம் விளைவிக்க எண்ணியதில்லை என்றும், இரு அரசியல் ஆளுமை குறித்து தான் விமர்சித்தேன் என்றும், நானும் ஒரு தாயின் எட்டாவது பிள்ளை என்கிற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்திருந்தேன்.
இதற்குப் பின்னரும் முதல்வர் எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்ற செய்தியை, செய்தித்தாள்கள் வாயிலாகப் படித்தேன். அதனால், மிகுந்த மன வேதனை அடைந்தேன். இடப்பொருத்தமற்று சித்தரிக்கபட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட என் பேச்சுக்காக எனது அடிமனதில் இருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால் முதல்வர் அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணருவாரேயானால் எனது மனம் திறந்த மன்னிப்பை கோர சிறிதும் எந்தவிதத் தயக்கமும் இல்லை. முதல்வருக்கும், கட்சியினருக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனி மனித விமர்சனங்கள் அல்ல, பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமையில் உள்ள மதிப்பீடும், ஒப்பீடும் தான். முதல்வர் காயப்பட்டு கலங்கியதற்காக எனது மனம் திறந்த மன்னிப்பைக் கேட்கும் அதே வேளையில் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன்.
என் மீது தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கை விசாரித்த நீதிபதி ஷைனி தன் தீர்ப்பின் கடைசி பக்கத்தில் இந்த வழக்கு எப்படி புனையப்பட்டது என்பதை நான்கு வார்த்தைகளால் முடித்தார். அது கோப்புகளை தவறாகப் படித்ததாலும், தேர்ந்த சிலவற்றை மட்டும் படித்ததாலும், சிலவற்றை படிக்காமல் விட்டதாலும், இடப் பொருத்தமற்று சில கோப்புகளை படித்ததாலும் புனையப்பட்டு தொடுத்த வழக்கு தான் இந்த 2ஜி வழக்கு என்று தீர்ப்பளித்தார். எனது (பிரச்சாரத்தில்) 40 நிமிட உரையை முழுவதுமாகக் கேட்டால் தமிழக மக்களும் ஷைனி வழங்கிய தீர்ப்பையே வழங்குவார்கள்” என நம்புகிறேன்.