வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, "ஜெயலலிதாவை தமிழகத்திற்கு அறிமுகம் செய்து தமிழகத்தை நாசமாக்கிய பாவத்தை செய்தவர்களில் நானும் ஒருவர்" எனக் கூறியுள்ளார்.
விழா மேடையில் பேசிய அவர், “நான் அதிமுகவிலிருந்து வந்துள்ளேன். எம்ஜிஆர் அமைச்சரவையில் பணியாற்றியுள்ளேன். கலைஞர் உடனும் பணியாற்றியுள்ளேன். தற்போதைய முதல்வர் ஸ்டாலினுடனும் பணியாற்றியுள்ளேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசங்கள்.
பெருந்தன்மையுள்ள தலைவர்கள் மத்தியில் ஜெயலலிதாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. 10 ஆண்டுக்காலம் நாடு குட்டிச் சுவரானதற்கு நாங்களும் ஒரு காரணம். ஜெயலலிதா ஹைதராபாத்திற்கு செல்கிறேன் எனச் சொன்னதும் நடராஜன் எனக்கு போன் செய்து, ஜெயலலிதா ஹைதராபாத்திற்குச் செல்கிறார். நீங்கள் போய் தடுத்து நிறுத்துங்கள் எனக் கூறினார். அப்பொழுது நானும் திருநாவுக்கரசும் வீட்டில் உட்கார்ந்துள்ளோம். கைலியோடு ஓடிச் சென்று தடுத்து நிறுத்துகிறோம். உங்களை விட்டால் நாட்டைக் காப்பாற்ற ஆள் இல்லை எனச் சொல்லி தடுத்து நிறுத்தினோம். அந்த பாவத்திற்கு நாடு 10 ஆண்டுக்காலம் அனுபவித்தது. அதையெல்லாம் கலைஞரும், ஸ்டாலினும் மாற்றி ஆட்சியை அமைத்துள்ளார்கள்.
அன்பழகன் பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம். அங்கு ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட ஆள் இல்லை. ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவருக்கும் இடையே யார் பெரியவர் எனச் சண்டை. இவர்கள் சண்டை தீருவதற்குள் தமிழகம் இரு தேர்தல்களைச் சந்தித்து விடும்” எனக் கூறினார்.