
நேற்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை குறித்தான சட்ட மசோதாவை கடந்த ஆண்டு 19 ஆம் தேதி சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 4 மாதங்கள் மசோதா கிடப்பில் இருந்த நிலையில், சட்ட மசோதாவை அரசுக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம் என்பதால் நேற்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவள விழா கொண்டாடும் வகையில் அக்கட்சியின் 'அகில இந்திய மாநாடு 2023' சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ஆன்லைன் ரம்மி குறித்து பேசிய அவர், “ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உணர்வு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு இப்படி ஒற்றைத்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள். சகோதரத்துவத்துக்கு துரோகமானவர்கள். சமதர்மத்தை ஏற்காமல் இருக்கக் கூடியவர்கள். சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்திற்கு கூட ஒப்புதல் தர மறுப்பது வருத்தமளிக்கிறது. நான்கு மாதம் கழித்து மாநில அரசுக்கு இதுபோன்ற சட்டத்தை இயற்ற உரிமை இல்லை என்று ஆளுநர் சொல்லுகிறார். இந்த ஒரு சாதாரண சட்டத்தை கூட இயற்ற உரிமை இல்லாத மாநிலத்திற்கு தான் அவர் ஆளுநராக இருக்கிறாரா. நீட் விலக்கிற்கு அவசர சட்டம் போட்டு அனுப்பினால் அதை நீண்ட கிடப்பில் போட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைக்கழக வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது. இதுதான் ஆளுநர் செயல்படக்கூடிய லட்சணமா.
உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டம் உடனடியாக நிறைவேறும். சிறும்பான்மையினருக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் வேகமாக நிறைவேறும். நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மக்களின் மருத்துவக் கனவை தகர்ப்பார்கள். இந்தியை திணிப்பார்கள். மாற்று மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் சூதாட்டத்தாலும் நுழைவுத் தேர்வினாலும் உயிர்கள் பலியாவதை தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தலாக 2024 நாடாளுமன்ற தேர்தல் அமையப் போகிறது. அதைத்தான் தொடர்ந்து நான் மட்டுமல்ல எல்லோரும் வலியுறுத்துகிறோம். அப்படி இணைந்து இருக்கும் கரங்களில் ஒன்று இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்காக அமைந்துள்ளது.” எனக் கூறினார்.