நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.
திமுக தொகுதி பங்கீடுகளை முடிவு செய்து, வேட்பாளர் நேர்காணலை நடத்தி வருகிறது. அதே நேரம் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்று பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சி.வி. சண்முகம் கூட்டணி குறித்து இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், இது குறித்து இரு கட்சிகள் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாமகவை போலவே தேமுதிகவும், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்த நிலையில், தற்போது தேமுதிக பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்று சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேமலதா விஜயகாந்த்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என உறுதியாக இருப்பதால் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.