சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (01.09.2024) நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் “2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையாக வல்லரசாக விளங்கும். பாடத்திட்டத்தைத் தாண்டி மாணவர்கள் யோசிக்க வேண்டும். தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது நமது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது. அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. மாநில பாடத்திட்டம் சிறப்பானதாக இல்லை. மிகவும் பின் தங்கி உள்ளது. நமது கல்லூரி மாணவர்களிடம் பேசும்போது அவர்களது அறிவுத்திறன் குறைவாக இருப்பது தெரிகிறது” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகையும் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநர் கடந்த காலங்களில் புதியக் கல்விக் கொள்கையைப் பற்றி அனைத்து மேடைகளிலும் பேசி வந்தார். ஆனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்காது என்று உறுதியாகத் தெரிந்தவுடன், மாநில கல்விக் கொள்கை மீது அவதூறையும், சேற்றையும் வீசத் தொடங்கியுள்ளார்.
இத்தனை ஆண்டுக் காலம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர், மாநில கல்விக் கொள்கை பற்றி கருத்துக் கூறாமல் தற்போது தரம் தாழ்ந்து விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பி.ஆர்.ஓ.போல் செயல்படுவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.