அ.தி.மு.க கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் நேற்று (17-10-23) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை, திருவொற்றியூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.குப்பன் தலைமையில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “நமது எடப்பாடி பழனிசாமி சாதுரியமாக செயல்பட்ட காரணத்தால் ஒவ்வொன்றாக வென்றார். சசிகலா, ஓ.பி.எஸ், தினகரன் என ஒவ்வொன்றையும் வென்றார். 94.5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமை என்றும் அவர் தான் பொதுச் செயலாளர் என்றும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது. இப்படி எல்லாவற்றையும் வென்றுவிட்டார். இஸ்லாமியர்களை காப்பது, கிறிஸ்தவர்களை காப்பது, தலித் கிறிஸ்தவர்களை காப்பது, என்பது மட்டும் தான் மீதம் இருந்தது. இப்போது பா.ஜ.க இல்லாததால் அதிலும் வென்றுவிட்டார்.
பா.ஜ.க.வை வெட்டி துண்டாக்கி கடலில் மூழ்கடித்துவிட்டோம். வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, இனி எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது இல்லை. தமிழ் மொழிக்காக எதிரான, தமிழ் மக்களுக்கு எதிரான பா.ஜ.க.வுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மத்தியில் ஆளுகின்ற வெறிபிடித்த பா.ஜ.க.வுக்கு மாற்றம் வர வேண்டும்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை ஒரு கொடுமையான அரசியல் இயக்கம். பா.ஜ.க தமிழகத்தை வஞ்சிக்கிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக் கூடாது என கேரளா பா.ஜ.க அங்கு போராடுகிறது. அதே போல், காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு தரக் கூடாது என கர்நாடக பா.ஜ.க அங்கு போராடுகிறது. உச்சநீதிமன்றமே தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அந்த தீர்ப்பை காலில் வைத்து மிதித்து மோடி செயல்படுகிறார். உரிய தன்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவை ஆண்டு கொண்டிருந்த பா.ஜ.க.விடம் பிரதமர் மோடி கூறவில்லை. இங்கு இருக்கக்கூடிய தமிழக பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் தமிழர்களே இல்லை. அவர்களுக்கு தமிழ் உணர்வும் இல்லை” என்று கூறினார்.